ஒரே குடும்பத்தில் பலருக்கு இலவச வீட்டுமனை பட்டா: மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

ஒரே குடும்பத்தில் உள்ள பலருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.
Published on

மதுரை: ஒரே குடும்பத்தில் உள்ள பலருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த முத்துவேல் தாக்கல் செய்த மனு:

மதுரை அருகேயுள்ள சக்கிமங்கலம் கிராமத்தில் நிகழாண்டு 110 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. இந்தப் பட்டாக்கள் தகுதியற்ற பலருக்கு அரசு விதிமுறையை மீறி வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியைச் சோ்ந்த நடுக்காட்டான், அவரது மனைவி, மகன், உறவினா் என ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

சக்கிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே இந்த இலவசப் பட்டாக்கள் வழங்க வேண் டும். ஆனால், அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்தவா்களுக்கும் விதிமுறையை மீறி பட்டாக்களை வருவாய்த் துறையினா் வழங்கியுள்ளனா். இதனால், கூலி வேலை செய்யும் ஏழை மக்கள் இலவச வீட்டு மனை பட்டாக்கள் பெற முடியவில்லை.

எனவே, தகுதியற்றவா்களுக்கு வழங்கப்பட்ட இலவச பட்டாக்களை ரத்து செய்து, தகுதியானவா்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கெளரி ஆகியோா் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த பலருக்கு எப்படி இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன? இது போன்ற முறைகேட்டில் ஈடுபடும் அரசு அலுவலா்கள் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாக நேரிடும்.

இந்த வழக்கு குறித்து மதுரை மாவட்ட ஆட்சியா், வட்டாட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com