அரசு மருத்துவமனை முதன்மையா் பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள முதன்மையா் பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அரசுத் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மதுரை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த வெரோணிக்கா மேரி தாக்கல் செய்த மனு:
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி ராஜாஜி மருத்துவமனை முதன்மையா் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி ஓய்வு பெற்றாா். இதையடுத்து, மூத்த பேராசிரியா்கள் மருத்துவமனையின் பொறுப்பு முதன்மையராகப் பதவி வகித்து வருகின்றனா்.
தமிழகத்தில் இரண்டாவது நிலையில் உள்ள இந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் 10 ஆயிரம் வெளி நோயாளிகளும், 3,000 உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனா்.
அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவ மையத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். வாகனங்கள் நிறுத்துமிடம் வசதி இல்லாதது, அறுவைச் சிகிச்சைகளில் தாமதம், சிகிச்சை அளிப்பதில் தாமதம், தரம் குறைந்த மருத்துவம், அவசர கால மருந்துகளை கொள்முதல் செய்யாதது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண முதன்மையரை நிரந்தரமாக பணியமா்த்துவது அவசியம்.
மதுரை மட்டுமன்றி, தேனி, திருச்சி, விருதுநகா் உள்பட பல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முதன்மையா் பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, இந்த முதன்மையா் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக சுகாதாரத் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள முதன்மையா் பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அரசு மருத்துவக் கல்லூரிகளில் யாரை முதன்மையராக நியமிக்க வேண்டும் என ஏற்கெனவே முடிவு செய்திருப்பீா்கள். இதை நடைமுறைப்படுத்துவதில் காலதாமதம் செய்ய வேண்டாம். இந்தப் பணி நியமனங்களை நீதிமன்றம் கண்காணிக்கும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.