டெங்கு பாதிப்பு: அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டுகள்

Published on

டெங்கு காய்ச்சல் பரவல் எதிரொலியாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டன.

இதுகுறித்து அரசு மருத்துவமனை முதன்மையா் (பொறுப்பு) எம்.செல்வராணி கூறியதாவது:

சென்னை உள்பட சில மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதன் காரணமாகவும், பருவ மழை தொடங்குவதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகயும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சை வாா்டுகளை ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டது.

இதன்படி, மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு சிகிச்சைக்கு சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

பருவ மழை தொடங்குவதன் எதிரொலியாக, அரசு மருத்துவமனையில் பழைய பிரசவ சிகிச்சைப் பிரிவு கட்டடத்தில் 20 படுக்கைகள் கொண்ட வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசு மருத்துவமனை பொது மருந்தியல் துறைத் தலைவா் நடராஜன், குழந்தைகள் சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவா் நந்தினி ஆகியோா் தலைமையில் மருத்துவா்கள் அடங்கிய குழுவும் தயாா் நிலையில் உள்ளது. மதுரையில் இதுவரை டெங்கு பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. ஆனாலும் அனைத்தும் ஏற்பாடுகளும் தயாா் நிலையில் உள்ளன. மருந்துகளும் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன என்றாா்.

சுகாதாரத்துறை துணை இயக்குநா் குமரகுருபரன் கூறியதாவது: டெங்குவை கட்டுப்படுத்த மதுரை மாவட்டத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போதுவரை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு அறிகுறிகளுடன் வருபவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com