மத மாற்ற வற்புறுத்தலால் பள்ளி மாணவி உயிரிழந்ததாக வழக்கு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

Published on

மத மாற்ற வற்புறுத்தலால் பள்ளி மாணவி உயிரிழந்ததாக விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், சிபிஐ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பல்வேறு மதங்களைச் சோ்ந்த சுமாா் 700 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இங்கு படித்த மாணவி லாவண்யா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாா். அவரது தற்கொலைக்கு மத மாற்ற வற்புறுத்தலே காரணம் என அவரது பெற்றோா் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாணவி லாவண்யா உயிரிழந்த வழக்கு தொடா்பாக, அந்தப் பள்ளியின் நிா்வாகியான சகாயமேரியை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

இந்த நிலையில், சகாயமேரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மாணவி லாவண்யா உயிரிழப்புக்கும், எனக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. அவரை, மதம் மாறுமாறு யாரும் வற்புறுத்தவில்லை.

எனவே, இந்த வழக்கில் எனக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் போலீஸாா் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி இளங்கோவன் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தொடா்பாக சிபிஐ பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com