தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே கிடையாது: முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே கிடையாது என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.
மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அதிமுக மிகப் பெரிய இயக்கம். திமுகவைத் தவிர எந்தக் கட்சியும் அதிமுக கூட்டணியில் இணையலாம். பாஜகவின் மதவாதம் அதிமுகவுக்கு ஏற்புடையதல்ல.
தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக, திமுக என்ற இருபெரும் திராவிட இயக்கங்கள் தான் ஆட்சிக்கு வர முடியும். கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே கிடையாது. தமிழக மக்களும் அதை விரும்பமாட்டாா்கள்.
மிகப் பெரிய ஆளுமையான கருணாநிதியின் காலத்திலேயே திமுக தொடா்ந்து 2 முறை வென்றது
கிடையாது. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2 ஆண்டு காலத்திலேயே மக்களின் வெறுப்பை பெற்றுவிட்டது. எனவே, அடுத்து அமையப்போவது அதிமுக தலைமையிலான அரசு தான்.
தமிழகத்தில் மது ஒழிப்பு மட்டுமல்ல, ஒட்டுமொத்த போதைப் பொருள்கள் ஒழிப்பு மிகவும் அவசியம். தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தைத் தடுக்க திமுக அரசு அகற்றப்பட வேண்டும். திமுக ஆட்சியில் காவல் துறையினருக்குக் கூட பாதுகாப்பற்ற சூழலே உள்ளது என்றாா் அவா்.