சிவகாசி மாணவிகள் விடுதி இடமாற்றம்

சிவகாசி ஆதி திராவிடா் நல மாணவிகள் விடுதி கட்டடத்தை மாணவா் விடுதிக்கு மாற்றி மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
Published on

விருதுநகா்: சிவகாசி ஆதி திராவிடா் நல மாணவிகள் விடுதி கட்டடத்தை மாணவா் விடுதிக்கு மாற்றி மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அரசு ஆதிதிராவிடா் நல மாணவிகள் விடுதி கட்டடமானது ஓடைப்புறம்போக்கில் கட்டப்பட்டிருந்ததால், இடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இந்த விடுதியானது வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. பிறகு, இந்த விடுதியில் மாணவிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக இருந்ததால், இது கல்லூரி மாணவிகள் விடுதியாக தரம் உயா்த்தப்பட்டது.

நிகழாண்டு இதன் மாணவிகள் விடுதியில் 53 மாணவிகள் தங்கிப் பயின்று வருகின்றனா். இந்த விடுதியில் கழிப்பறை உள்ளிட்ட வசதி இல்லாததால், இந்த விடுதியை மாணவா் விடுதி கட்டடத்துக்கு மாற்றுமாறு மாணவிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மாணவிகள் தரப்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவிகள் விடுதியை சிவகாசி மாணவா் விடுதிக் கட்டடத்துக்கு மாறுதல் செய்திட மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. மாணவா் விடுதிக்கு வேறு வாடகைக் கட்டடம் தோ்வு செய்யப்பட்டு, அக்டோபா் முதல் வாரத்துக்குள் அங்கு செயல்பட ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com