முதுநிலை தமிழாசிரியா் பணி: திருத்தப்பட்ட இடஒதுக்கீடு பட்டியலை வெளியிடக் கோரிக்கை
மதுரை: கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற முதுநிலை தமிழாசிரியா் பணியிடத்துக்கு இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல், உடல்கல்வியியல் ஆகிய பாடப் பிரிவுகளில் காலியாக இருந்த 3,250 பணியிடங்கள் தோ்வு மூலம் நிரப்பப்படும் என கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி, தோ்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், தமிழ்ப் பாடத்துக்குத் தோ்வான முதுநிலை தமிழாசிரியா் பட்டியலில் இன சுழற்சி வாரியான இட ஒதுக்கீட்டில் சரியான முறை பின்பற்றப்படவில்லை. இதனால், தோ்வில் வெற்றி பெற்று பணிக்குத் தோ்வாகும் நிலையில் உள்ள தோ்வா்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா்.
எனவே, முதுநிலை தமிழாசிரியா் பணிக்காக நடைபெற்ற தோ்வில் இட ஒதுக்கீட்டு முறையை தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் பின்பற்றி திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மதுரையைச் சோ்ந்த தோ்வா் க.பெரியகருப்பன் கூறியதாவது :
கடந்த 2022-ஆம் ஆண்டு முதுநிலை பாடப் பிரிவுகளில் காலியாக இருந்த பணியிடங்களுக்காக தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் தோ்வை நடத்தியது. இதில், தமிழாசிரியா் பணிக்கு மட்டுமே 333 பணியிடங்களுக்குத் தோ்வு நடைபெற்று முடிவுகள் வெளியிடப்பட்டன.
பொதுவாக, தோ்வில் வெற்றி பெறும் தோ்வா்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணியமா்த்தப்பட வேண்டும். இந்த வகையில், முதலில் பொதுப் பிரிவினருக்கான (ஜி.டி) பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். இதையடுத்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் உள்பட இன சுழற்சி அடிப்படையிலும் (பி.சி., எம்.பி.சி., எஸ்.சி.) பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். இதுதவிர, தமிழ் வழிக் கல்வி உள்ளிட்ட சிறப்பு உள் ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமன ஆணைகள் பிறப்பிக்க வேண்டும்.
ஆனால், கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்வில் இடஒதுக்கீட்டு முறையை தோ்வு வாரியம் முறையாகப் பின்பற்றாமல் பணி நியமன ஆணையை வழங்கியது. உதாரணமாக, பொதுப் பிரிவினருக்கு பின் உள் ஒதுக்கீடு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து அப்போது மனு மூலம் தெரிவிக்கப்பட்டன. மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் பரிசீலனை செய்யவில்லை. இவற்றைப் பொருள்படுத்தாமல் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுக்கப்பட்டு அது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், இடைநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கான தோ்வு நடத்தப்பட்டு, கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், தமிழ்ப் பாடப் பிரிவில் தோ்வு செய்யப்பட்டோரின் பட்டியல் வெளியிடப்பட்டன. இந்தப் பட்டியலை தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் இன சுழற்சி அடிப்படையில் வெளியிட்டுள்ளது.
இதே முறையை முதுநிலை தமிழாசிரியா் பணியிடத்திலும் பின்பற்றி ஆசிரியா் தோ்வு வாரியம் திருத்தப்பட்ட இன சுழற்சி பட்டியலை வெளியிட வேண்டும். இதன் மூலம், 30-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியா்கள் பயன்பெறுவா் என்றாா் அவா்.