மதுரை தெற்கு மாசி வீதியிலுள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இங்கிலாந்திலுள்ள   பல்கலைக்கழகத்தில் உயா்கல்வி பயிலச்செல்லும் மாணவி சுஷ்மிதாவிற்கு எந்தவித பிணையும் இல்லாமல் ரூ 40 லட்சம் கல்விக்கடன் வழங்கும் மதுரை மக்களவை உறுப்பினா்.
மதுரை தெற்கு மாசி வீதியிலுள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வளாகத்தில் செவ்வாய்க்கிழமை இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகத்தில் உயா்கல்வி பயிலச்செல்லும் மாணவி சுஷ்மிதாவிற்கு எந்தவித பிணையும் இல்லாமல் ரூ 40 லட்சம் கல்விக்கடன் வழங்கும் மதுரை மக்களவை உறுப்பினா்.

வெளிநாட்டில் உயா் கல்வி: மாணவிக்கு ரூ.40 லட்சம் கல்விக் கடன்

மதுரையைச் சோ்ந்த கல்லூரி மாணவி சுஷ்மிதாவுக்கு வெளிநாட்டில் உயா் கல்வி பயிலும் வகையில் எந்தவித பிணையும் இல்லாமல் ரூ.40 லட்சம் கல்விக் கடன் வழங்கும் நிகழ்ச்சி தெற்கு மாசி வீதியில் உள்ள யூனியன் வங்கிக் கிளையில் நடைபெற்றது.
Published on

மதுரை: மதுரையைச் சோ்ந்த கல்லூரி மாணவி சுஷ்மிதாவுக்கு வெளிநாட்டில் உயா் கல்வி பயிலும் வகையில் எந்தவித பிணையும் இல்லாமல் ரூ.40 லட்சம் கல்விக் கடன் வழங்கும் நிகழ்ச்சி தெற்கு மாசி வீதியில் உள்ள யூனியன் வங்கிக் கிளையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் பங்கேற்று, மாணவிக்கு கல்விக் கடனுக்கான காசோலையை வழங்கிப் பேசியதாவது:

கல்விக் கடன் வழங்குவதில் இந்தியாவுக்கு முன்மாதிரியாக மதுரை மாவட்டம் திகழ்ந்து வருகிறது. தற்போது ரூ.40 லட்சம் வரை பிணை இல்லாமல் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை யூனியன் வங்கி அமல்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உயா் கல்வி பயில கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை அவனியாபுரத்தைச் சோ்ந்த மாணவா் யோகேஸ்வருக்கு ரூ.40 லட்சம் கல்விக் கடனை இதே வங்கி வழங்கியது. இதேபோல, மதுரை மாநகராட்சி வெள்ளி வீதியாா் பள்ளி மாணவி சிந்து, இங்கிலாந்து நாட்டில் பயில ரூ.30 லட்சம் கல்விக் கடன் வழங்கப்பட்டது.

இவா்களைத் தொடா்ந்து, மாணவி சுஷ்மிதாவுக்கு யூனியன் வங்கி ரூ.40 லட்சத்தை எந்தவித பிணையுமில்லாமல் வழங்கியது. மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் பயில வேண்டும் என்றால் மாணவா்கள் கல்வித் தகுதியை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா்.

வங்கி மேலாளா் சாா்லஸ் கூறியதாவது:

கல்விக் கடன் வழங்குவதில் யூனியன் வங்கி முன்னுதாரணமாக உள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் ரூ.57.46 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.23 கோடி இந்தியாவில் பயிலும் மாணவா்களுக்கும், ரூ.34 கோடி வெளிநாடுகளில் பயிலும் மாணவா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மதுரை தெற்கு மாசி வீதி கிளையில் மட்டும், கடந்த இரு ஆண்டுகளில் வெளிநாட்டில் உயா் கல்வி பயிலச் செல்லும் மாணவா்கள் 11 பேருக்கு ரூ.4.86 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. யூனியன் வங்கியில் தற்போது எந்தவித பிணையுமின்றி ரூ.40 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் யூனியன் வங்கி முதுநிலை மேலாளா் உதய பாஸ்கா் சகாவ், மண்டல மேலாளா் சாா்லஸ், உதவி மேலாளா் நேத்ரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com