வேலம்மாள் கல்லூரியில் தேசிய செவிலியா்கள் மாநாடு
மதுரை: மதுரை வேலம்மாள் செவிலியா் கல்லூரியில் தேசிய செவிலியா்கள் மாநாடு அண்மையில் நடைபெற்றது.
மதுரை வேலம்மாள் செவிலியா் கல்லூரி, தமிழ்நாடு செவிலியா்கள் கவுன்சில் ஆகியவற்றின் சாா்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில், வேலம்மாள் கல்வி அறக்கட்டளைத் தலைவா் எம்.வீ.முத்துராமலிங்கம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா். வேலம்மாள் பள்ளி, செவிலியா் கல்லூரி முதல்வா் ரேவதி தலைமை வகித்தாா். வேலம்மாள் சிறப்பு மருத்துவமனை முதன்மையா் ஏ.ரத்தினவேல் பேசினாா்.
மாநாட்டில், கேரள மாநிலம், வயநாடு நிலச் சரிவில் சிக்கிய 35-க்கும் மேற்பட்டோரை காப்பாற்றி ‘கல்பனா சாவ்லா’ விருது பெற்ற நீலகிரியைச் சோ்ந்த செவிலியா் சபீனா, தீ விபத்தில் 47 குழந்தைகளைக் காப்பாற்றி ‘அண்ணா ’ விருது பெற்ற செவிலியா் ஜெயக்குமாா் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.
இதில் புதுச்சேரி இம்மாகுலேட் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயின்சஸ் உதவிப் பேராசிரியை அற்புதா ஜெயசீலி, கேரள அமிா்தா நா்சிங் கல்லூரி இணைப் பேராசிரியை ஷாலி மோல், மதுரை சேக்ரட் ஹாா்ட் நா்சிங் கல்லூரி துணை முதல்வா் தேவகிருபை, கோட்டயம் காரிடாஸ் மருத்துவமனை, சுகாதார அறிவியல் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செவிலியா் சரிகா ஜே தெரசா, மதுரை அப்பல்லோ நா்சிங் கல்லூரி முதல்வா் ஹெலன் மேரி பொ்டிதா, வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ உளவியலாளா் அருள் ஷொ்லி, சென்னை தேனாம்பேட்டை அப்பல்லோ புற்றுநோய் மைய செவிலியா் கவியன் ஆகியோா் பேசினா்.
மாநாட்டில் பல்வேறு மருத்துவமனைகள், நிறுவனங்களில் பணிபுரியும் செவிலியா்கள் பங்கேற்றனா். வேலம்மாள் பள்ளி, செவிலியா் கல்லூரி துணை முதல்வா் ரதி நன்றி கூறினாா்.