வன விலங்குகளைப் பாதுகாப்பதற்கான சுற்றுச்சூழலை அரசு உறுதி செய்ய வேண்டும்: உயா்நீதிமன்றம்
வன விலங்குகளைப் பாதுகாப்பதற்கான சுற்றுச்சுழலை அரசு உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த முத்து இருளப்பன் தாக்கல் செய்த மனு:
நான் நான்கு பசு மாடுகளை வளா்த்து வந்தேன். கடந்தாண்டு அக். 27-ஆம் தேதி இந்தப் பசுக்களை மேய்ச்சலுக்கு விட்டிருந்தேன். அப்போது, மின் மாற்றி (வேலி இல்லை) அருகே தேங்கியிருந்த தண்ணீரைக் குடிக்கச் சென்ற ஒரு பசு மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தது. இதற்கு தமிழக மின்சார வாரியம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் பசு மாட்டின் உயிரிழப்புக்கு தமிழ்நாடு மின்சார வாரியம்தான் காரணம் என்பது தெளிவாகிறது. எனவே, அந்தத் துறையினா்தான் இழப்பீடு வழங்க வேண்டும். கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் மின்சாரம் பாய்ந்ததில் 9 ஆயிரம் பேரும், 249 விலங்குகளும் உயிரிழந்துள்ளதாக தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
விலங்குகளுக்கென எந்த ஓா் அடிப்படை உரிமையும் கிடையாது. எனவே, விலங்குகளை அரசு பாதுகாக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற கேள்வி எழுகிறது. விலங்குகள் மின்சாரம் பாய்வதால் மட்டும் உயிரிழக்கவில்லை. நெகிழிக் குப்பைகளை உண்பதாலும் உயிரிழக்கின்றன. விலங்குகள் சித்ரவதை சட்டத்தில் நெகிழி குறித்து எதுவும் பேசப்படவில்லை. இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
விலங்குகளைப் பாதுகாக்க முடியாத சூழல் உருவாகும் போது, அவற்றுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த நீதிமன்றம் முன்னெடுக்கும். எனவே, விலங்குகளைப் பாதுகாப்பதற்கான சுற்றுச்சூழலை அரசு உறுதி செய்ய வேண்டும். நெகிழி இல்லாத நிலையைக் கொண்டு வர வேண்டும். மின்சார வாரியமும் பாதுகாப்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மனுதாரருக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் நீதிபதி.