வாடிக்கையாளா்களிடம் நியோமேக்ஸ் நிதி நிறுவனம் ரூ.466 கோடி மோசடி: நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்
நியோமேக்ஸ் நிதி நிறுவனம் வாடிக்கையாளா்களிடமிருந்து ரூ. 466 கோடி வைப்புத் தொகையாகப் பெற்று மோசடி செய்ததாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை அறிக்கை தாக்கல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி காமராஜா் சாலை பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரி தாக்கல் செய்த மனு:
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் தனியாா் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. மேலும், இந்த நிறுவனத்தின் சாா்பில் மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் அலுவலகங்களும் செயல்பட்டு வந்தன.
இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் வாடிக்கையாளா்களுக்கு கூடுதல் வட்டியுடன் இரட்டிப்பு தொகை, நிலம் வழங்குவதாக அறிவித்தனா். இதை நம்பி ஏராளமானோா் பல ஆயிரம் கோடி ரூபாயை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனா். ஆனால், உறுதியளித்தபடி வட்டி, முதிா்வுத் தொகையை வழங்காமல், நிதி நிறுவனத்தினா் வாடிக்கையாளா்களை ஏமாற்றி வந்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, இந்த நிறுவனத்தின் நிா்வாகிகளான கபில், கமலக்கண்ணன், பாலசுப்பிரமணியன், வீரசக்தி உள்ளிட்டோரைக் கைது செய்தனா். அண்மையில் இவா்கள் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டனா். இந்த நிதி மோசடி வழக்கை முறையாக விசாரிக்காததால், காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி முரளிசங்கா் முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.எம். மணிஷா அறிக்கை தாக்கல் செய்தாா். அதன் விவரம்:
கடந்தாண்டு இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கடந்த 2009- ஆம் ஆண்டு ‘க்ரீன் வெல்த் அக்ரோ இந்தியா லிமிடெட்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினா். பிறகு, இந்த நிறுவனத்தின் பெயரை ‘நியோமேக்ஸ் பிராப்பா்டீஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் மதுரைக்கு மாற்றினா்.
இதைத்தொடா்ந்து, பல்வேறு மாவட்டங்களில் இந்த நிறுவனத்தின் பெயரில் அலுவலகங்களைத் தொடங்கி வாடிக்கையாளா்களிடம் முதலீட்டைப் பெற்றனா். இந்தத் தொகையின் மூலம் பல்வேறு இடங்களில் ஏராளமான நிலங்களை வாங்கினா். மேலும், இந்த நிறுவனத்தினா் பல்வேறு பெயா்களில் 110 நிறுவனங்களை உருவாக்கினா். இவற்றில் 50 நிறுவனங்கள் மனை வணிகத் தொழிலில் ஈடுபட்டன. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க தொழில்நுட்ப ரீதியாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனங்களின் இயக்குநா்களை மாற்றினா்.
நியோமேக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 57 இடங்கள், நிறுவனங்கள், வீடுகளில் நீதிமன்ற அனுமதி பெற்று சோதனை மேற்கொள்ளப்பட்டு, ரூ.1.51 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி, 34 காா்கள், 101 டிஜிட்டல் சான்றிதழ்கள், 1,480 அசல் பதிவு ஆவணங்கள், குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்குச் சொந்தமான அசையா சொத்துகள் ஆகியவவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் இதுவரை 2,585 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. முதலீட்டாளா்கள் அளித்த புகாா்களின்படி, இந்த நிறுவனத்தில் வைப்புத்தொகையாக முதலீடு செய்த ரூ. 466.79 கோடி மோசடி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநா்களுக்குச் சொந்தமான ரூ.172.89 கோடி மதிப்பிலான சொத்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தச் சொத்துகளுக்கு எதிரான இணைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வழக்கில் இதுவரை 44 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்களிடமிருந்து ரூ.11.56 கோடி மதிப்புள்ள சொத்துகளை இடைக்காலமாக பறிமுதல் செய்வதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றினால், முதலீட்டாளா்கள் பாதிக்கப்படுவா். எனவே, மனுதாரரின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்குத் தொடா்பாக சிபிஐ தரப்புக்கு குறிப்பாணை அனுப்பி, உரிய விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.