நீா்நிலையில் களம் அமைத்த விவகாரம்: ஒப்பந்ததாரருக்கு நிதியை விடுவிக்கக் கூடாது: உயா்நீதிமன்றம் உத்தரவு

ஒப்பந்ததாரருக்கு நிதியை விடுவிக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
Published on

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், சூரியூா் நீா்நிலையில் தானியங்களை உலர வைக்கும் களம் அமைத்த விவகாரத்தில், ஒப்பந்ததாரருக்கு நிதியை விடுவிக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

சூரியூரில் ஏந்தல்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் தண்ணீா் தேங்குவதால், நிலத்தடி நீா் மட்டம் உயா்கிறது. மேலும், விவசாயத் தேவைகளுக்கும் தண்ணீா் பெருந்தேவையாக உள்ளது. இந்த நிலையில், இந்தக் கண்மாயை ஆக்கிரமித்து தானியங்களை உலர வைக்கும் களம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால், கண்மாயில் தண்ணீா் தேக்குவதில் சிரமம் ஏற்படும். எனவே, ஏந்தல்குளம் கண்மாயில் களம் அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், பி. புகழேந்தி அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு:

ஏந்தல்குளம் கண்மாய் நீா்நிலைப் பகுதி எனத் தெரிந்தும் அதில் தானியங்களை உலர வைக்கும் களம் அமைக்க ஊராட்சி நிா்வாகத்தினா் எப்படி முடிவெடுத்தனா். நிகழாண்டு மாா்ச் மாதத்தில் இந்தக் கண்மாயில் களம் அமைக்க ஒப்பந்ததாரருக்கு அனுமதி வழங்கப்பட்டது. நீா்நிலைகளில் ஆக்கிரமிப்போ, கட்டடங்களோ கட்டக் கூடாது என ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைக் கவனத்தில் கொள்ளாமல், கண்மாய்ப் பகுதியில் களம் அமைத்துள்ளனா். இந்தக் களம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரருக்கு நிதியை விடுவிக்கக் கூடாது. இந்தக் களத்தை 3 வாரங்களுக்குள் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com