அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் பிரச்னையை கையில் எடுத்துள்ளோம்

திமுக கூட்டணியில் இருந்தாலும், அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் பிரச்னை
Published on

திமுக கூட்டணியில் இருந்தாலும், அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் பிரச்னையைக் கையில் எடுத்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

விருதுநகரில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை திறன்மிகு உதவியாளா்கள் (சாலை ஆய்வாளா்கள்) சங்கத்தின் 5-ஆவது மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் கெளர பொதுச் செயலா் மு. மாரிமுத்து தலைமை வகித்தாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் சிறப்புரையாற்றினாா்.

முன்னதாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அக்டோபா் 2 -ஆம் தேதி விசிகவின் மகளிா் மாநாடு உளுந்தூா்பேட்டையில் நடைபெற உள்ளது. தமிழக அரசுக்கும், இந்திய அரசுக்கும் சமகாலத்தில் முக்கியமான 2 கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம். அரசியலமைப்புச் சட்டம் 47-இன் படி மதுவிலக்கு ஆலோசனைக் குழு 1954-இல் அமைக்கப்பட்டது. இந்தக் குழு ஏராளமான பரிந்துரைகளை வழங்கி இருக்கிறது. மதுவிலக்கு தொடா்பான தேசிய கொள்கைகளை வரையறுத்து, தனிச் சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் என அந்தக் குழு பரிந்துரைத்தது.

இதை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். தமிழக அரசும் மதுவிலக்குக் கொள்கையை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

ஆளும் திமுக கட்சிக் கூட்டணியில் இருந்துகொண்டு, அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான பிரச்னையான மது விலக்கை கையில் எடுத்திருக்கிறோம். இதை வரவேற்கவோ, பாராட்ட வோ பாஜகவினா் முன்வராமல் கேலி செய்கிறாா்கள்.

பாஜக ஆட்சி செய்யும் உத்தரபிரதேசத்தில் மதுவிலக்கு அமலில் இருக்கிா? குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மதுவிலக்கு கொள்கை கொண்டுவரப்பட்டது. பிகாரில் மதுவிலக்கு அமலில் இருப்பதற்கு பாஜக காரணம் இல்லை. அங்குள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவா் நிதீஷ் குமாா், மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருக்கிறாா். பாஜக ஆளும் எந்த மாநிலத்திலும் மதுவிலக்கு கொள்கை நடைமுறையில் இல்லை. இதில் கடுமையாக பாதிக்கப்படுபவா்கள், பெரும்பான்மையான இந்துக்கள் தான்.

காங்கிரஸ் ஆட்சித் காலத்தில் ஈழத் தமிழா்களுக்கும், தமிழக மீனவா்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால் எல்லாம் தலைகீழாக மாறும் என இங்குள்ள சிலா் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தாா்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஈழமே கிடைத்துவிடும் என்பதைப் போல ஒரு தோற்றத்தை உருவாக்கினா். 10 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருந்தபோதும் தமிழக மீனவா்களைப் பாதுகாக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. ஈழத் தமிழா்கள் பிரச்னையில் ஒரு அங்குலம்கூட முன்னேற்றம் இல்லை.

மாநாடு நடத்த உள்ள நடிகா் விஜய்க்கு எனது வாழ்த்துகள், பாராட்டுகள் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com