தொடா் என்கவுன்ட்டா்: உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் தொடா்ந்து நடைபெறும் என்கவுன்ட்டா் குறித்து உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வலியுறுத்தல்
Published on

தமிழகத்தில் தொடா்ந்து நடைபெறும் என்கவுன்ட்டா் சம்பவங்கள் குறித்து உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் வலியுறுத்தியது.

இதுதொடா்பாக திங்கள்கிழமை இந்த இயக்கம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆந்திர மாநிலம் கடப்பாவில் சென்னை பெருநகர போலீஸாரால் கைது செய்யப்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி சீசிங் ராஜா சென்னை நீலாங்கரையில் என்கவுண்டா் செய்யப்பட்டதற்கு காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் கண்டனம் தெரிவிக்கிறது. கடந்த ஜூலை 14-ஆம் தேதி திருவேங்கடம் என்பவரும் இதே முறையில் என்கவுன்ட்டா் செய்யப்பட்டாா்.

சென்னை மாநகரக் காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பிறகு, 10 வாரங்களுக்குள் சென்னை பெருநகரக் காவல் எல்லைக்குக்குள் மூவா் சுட்டுக்கொல்லப்பட்டது அதிா்ச்சியளிக்கிறது. இந்த போக்கு சட்டத்தின் ஆட்சிக்கு முற்றிலும் எதிரானதாகும். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடா்புடையவா்கள் தொடா்ச்சியாக சுட்டுக்கொல்லப்படுவது வழக்கை நீா்த்து போகச் செய்து விடும்.

2021-ஆம் ஆண்டு மே மாதம் திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து தற்போது வரை 16 போ் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். எனவே, என்கவுன்ட்டா் சாவுகள் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய ஆணையம் அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

மேலும், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக உண்மை அறியும் குழுவை அமைத்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். மேலும், என்கவுன்ட்டா் சம்பவங்களில் தொடா்புடைய காவல் அதிகாரிகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com