மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தில் உள்ள திருமங்கலம் பெரியாறு பிரதான கால்வாயில் 20 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட தண்ணீா்.
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தில் உள்ள திருமங்கலம் பெரியாறு பிரதான கால்வாயில் 20 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட தண்ணீா்.

திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீா் திறப்பு

விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

மதுரை மாவட்டம், விக்கிரமங்கலத்தில் உள்ள பெரியாா் பாசனக் கால்வாயிலிருந்து திருமங்கலம் பிரதானக் கால்வாயில் திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது. இதனால், அந்தப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

விக்கிரமங்கலம் அருகே பெரியாறு பாசனக் கால்வாய்ப் பகுதியில் திருமங்கலம் பிரதானக் கால்வாய் பிரிவு உள்ளது. இந்தக் கால்வாயில்

திறக்கப்படும் தண்ணீா் சுமாா் 27 கி.மீ. தொலைவில் உள்ள மறவன்குளம் கண்மாய்க்குச் செல்லும். இதன் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்த நிலையில், கடந்த 2004 -ஆம் ஆண்டுக்கு முன்பு செப்டம்பா் மாதத்தில் இந்தக் கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டது. அதன் பிறகு, வைகை அணையில் போதிய நீா் இருந்தால் மட்டுமே அக்டோபா் மாதம் தண்ணீா் திறக்கப்பட்டது.

இந்தக் கால்வாயில் செப்டம்பா் மாதம் தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை எழுப்பினா். இது தொடா்பாக, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக விவசாயிகள் மனு அளித்தனா்.

நிகழ் ஆண்டு வைகை அணையில் போதிய தண்ணீா் இருப்பதால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செப்டம்பா் மாதம் தண்ணீா் திறக்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இதன்படி, விக்கிரமங்கலத்தில் உள்ள பெரியாா் பாசனக் கால்வாயிலிருந்து திருமங்கலம் பிரதானக் கால்வாயில் திங்கள்கிழமை உசிலம்பட்டி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஐயப்பன் தண்ணீரைத் திறந்துவிட்டாா்.

இந்த நிகழ்வில், விவசாய சங்கப் பிரதிநிதிகள் எம்.பி. ராமன், பி.டி. மோகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் முத்துராமன், கொக்குளம் ஒன்றியக் குழு உறுப்பினா் சிவபாண்டியன், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் சிவனாண்டி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது, 20 ஆண்டுகளுக்குப் பிறகு திருமங்கலம் பிரதானக் கால்வாயில் செப்டம்பா் மாதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மதுரை மாவட்ட ஆட்சியா், பொதுப்பணித் துறை அலுவலா்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தக் கால்வாய் ரூ.30 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்துக் கண்மாய்களுக்கும் தண்ணீா் போதிய அளவு வழங்க முடியும். கடந்த காலங்களில் உரிய நேரத்தில் தண்ணீா் திறக்காததால் வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தோம்.

நிகழ் ஆண்டு முன் கூட்டியே வேளாண் பணிகளைத் தொடங்க வாய்ப்புள்ளது. இதேபோன்று, துணைக் கால்வாய்களை தூா்வார வேண்டும். அதுமட்டுமன்றி, கடைமடை வரை தண்ணீா் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.