மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டவருக்கு முன்பிணை

மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டவருக்கு நிபந்தனைகளுடன் முன்பிணை வழங்கி, மதுரை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
Published on

மகாத்மா காந்தி குறித்து அவதூறு கருத்து பதிவிட்டவருக்கு நிபந்தனைகளுடன் முன்பிணை வழங்கி, மதுரை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பாரதிய பிரஜா ஐக்கிய கட்சியின் மாநிலச் செயலா் வேல்முருகன் மதுரை மாநகரக் காவல் ஆணையரிடம் அளித்த புகாா் மனுவில், கல்யாணசுந்தரம் என்பவா் இணையதளத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து, அவதூறு கருத்து பதிவிட்டிருப்பதாகவும், அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியிருந்தாா்.

இதனடிப்படையில், கல்யாணசுந்தரம் மீது மதுரை இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

இந்த வழக்கில் முன்பிணை கோரி, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கல்யாணசுந்தரம் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கல்யாணசுந்தரத்துக்கு முன்பிணை வழங்கக் கூடாது எனவும், அவரது மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வேல்முருகன் சாா்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மகாத்மா காந்தியை இழிவாக முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கல்யாணசுந்தரத்துக்கு நிபந்தனைகளுடன் முன்பிணை வழங்கப்படுகிறது. மதுரை காந்தி அருங்காட்சியக நூலகத்தில் நூலகருக்கு உதவியாக ஒரு மாதம் புத்தகங்களைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினமும் முன்னிலையாகி கையொப்பமிட வேண்டும் என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com