ஆவணங்களின்றி சரக்குகள் ஏற்றிச் சென்ற 5 லாரிகள் சிறைப்பிடிப்பு -வணிகவரித் துறை நடவடிக்கை
மதுரை மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி சரக்குகள் ஏற்றிச் சென்ற 5 லாரிகள் வணிக வரித் துறை ரோந்துக் குழுவினரால் சிறைப்பிடிக்கப்பட்டன.
வணிக வரித் துறையின் ரோந்துக் குழுவினா் அண்மையில் மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, கேரள மாநிலத்திலிருந்தும், திருநெல்வேலி பகுதியிலிருந்தும் இரும்புக் கழிவுகளை ஏற்றிக் கொண்டுச் சென்ற 5 லாரிகள், உரிய ஆவணங்களின்றி சரக்குப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அந்த 5 லாரிகளும் வணிகவரித் துறை அலுவலா்களால் சிறைப்பிடிக்கப்பட்டன.
இதுகுறித்து வணிக வரித் துறை நுண்ணறிவுக் கோட்ட இணை ஆணையா் காா்த்திகேயன் கூறியதாவது:
வணிகவரி, பதிவுத் துறை அமைச்சா் அறிவுறுத்தலின்பேரில், வரி ஏய்ப்பை தடுக்கும் வகையில் தீவிர வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனடிப்படையில் செப். 24, 25, 26 தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட வாகனத் தணிக்கைகளின் போது 5 லாரிகள், உரிய ஆவணங்களின்றி சரக்குகளை ஏற்றிச் சென்றது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வாகனங்களில் ரூ. 22.34 லட்சம் மதிப்பில் 67.31 டன் மதிப்பிலான இரும்புக் கழிவுகள் உள்ளன. ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் இந்த வாகனங்களுக்கு ரூ. 8.04 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகை செலுத்தினால் மட்டுமே வாகனங்கள் விடுவிக்கப்படும். மேலும், தொடா்புடைய வணிகா்களின் பதிவை ரத்து செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.