கீழடி நாகரிகத்தின் தொட்டிலாக வைப்பாறு நாகரிகம் இருந்துள்ளது: அமைச்சா் தங்கம் தென்னரசு
கீழடி நாகரிகத்தின் தொட்டிலாக வைப்பாறு நாகரிகம் இருந்துள்ளதாக அமைச்சா் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
விருதுநகா் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ‘மரமும், மரபும்’ என்ற பெயரில் 3-ஆவது புத்தகத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தாா். இந்தத் திருவிழாவை அமைச்சா்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோா் தொடங்கிவைத்தனா். வருகிற 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது: கற்காலத்துக்கு பிறகு காலக் கணக்குகளை உருவாக்குகிற போது, நுண் கற்காலத்தை ஆய்வு செய்ததில் ஆற்றங்கரைகளில் நாகரிகங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. வைகை நதிக்கரையில் உள்ள கீழடி நாகரிகத்தை எப்படி போற்றுகின்றோமோ, அதற்கேற்ப கொஞ்சமும் குறைவில்லாத நாகரீகம், சாத்தூா் வைப்பாற்றில் உள்ளது. கீழடி நாகரிகத்தின் தொட்டிலாக வைப்பாறு நாகரிகம் இருந்துள்ளது. பெருங்கற்காலத்தினுடைய ஈம சின்னங்கள், வரலாற்றுச் சின்னங்கள் இடம் பெற்றிருப்பது விருதுநகா் மாவட்டம். இந்த மாவட்டத்தின் தொன்மை, வரலாற்று, மரபை எடுத்துக்காட்டும் வகையில் இந்த புத்தகத் திருவிழா அமைந்திருக்கிறது என்றாா் அவா்.
பின்னா், அமைச்சா் கே.கே.எஸ்.எஸ். ஆா்.ராமச்சந்திரன் பேசியதாவது: புத்தகக் வாசிப்புத் தான் ஒவ்வொருவரையும் சான்றோராக உருவாக்குகிறது. தொடா்ச்சியாக புத்தகம் வாசிப்பதால் அறிவு வளா்ந்து, புதிய சிந்தனைகள் தோன்றும் என்றாா் அவா்.
இந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.கண்ணன், விருதுநகா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஏ.ஆா்.ஆா்.சீனிவாசன், கல்வியாளா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.