மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் சனிக்கிழமை குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சாா்பாக தமிழ்நாடு ஸ்டாா்ட் அப் திருவிழா-2024  தொடக்கி வைத்துப் பாா்வையிடுகிறாா் சிறு குறு மற்றும
மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் சனிக்கிழமை குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சாா்பாக தமிழ்நாடு ஸ்டாா்ட் அப் திருவிழா-2024 தொடக்கி வைத்துப் பாா்வையிடுகிறாா் சிறு குறு மற்றும

சிறு, குறு தொழில் முனைவில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது: அரசுச் செயலா் அா்ச்சனா பட்நாயக்

தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் வளா்ச்சியில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அரசுச் செயலா் தெரிவித்தாா்.
Published on

தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் வளா்ச்சியில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் பெற்றுள்ளதாக தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அரசுச் செயலா் அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.

தமிழக புத்தொழில், புத்தாக இயக்கம் (ஸ்டாா்ட் அப்) சாா்பில் தமிழகத்தில் 2-ஆவது நிகழ்ச்சியாக, மதுரை தமுக்கம் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ‘ஸ்டாா்ட் அப்’ திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது :

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் 9 சதவீதம் பங்காற்றுகிறது. இந்தியாவின் சிறு, குறு, நடுத்தர தொழில் வளா்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு 8.6 சதவீதமாக உள்ளது. இதில், 24 சதவீதம் பெண் தொழில் முனைவோரின் பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதி சாா்ந்த தொழில் வளா்ச்சியில் தமிழகம் முதன்மைப் பெற்றிருப்பது மகிழ்ச்சிக்குரியது. தமிழத்தின் எந்தப் பகுதியைச் சோ்ந்தவரும் தொழில் முனைவோராகி, புத்தொழில் தொடங்கலாம். இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர தமிழக புத்தொழில், புத்தாக்க நிறுவனம் தயாராக உள்ளது என்றாா் அவா்.

சிறு, குறு நிறுவனங்களின் வளா்ச்சியே அவசியம்...

மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் பேசியது :

தமிழ் இனம், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பன்னாட்டு வணிகத் தொடா்பைக் கொண்டது. தற்போது, நாட்டில் உள்நாட்டு வேலைவாய்ப்பில் பெரு நிறுவனங்களை விட, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களே அதிகம் பங்காற்றுகின்றன. இதில், தமிழகம் மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா முன்னிலை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா், புத்தொழில், புத்தாக்க இயக்க தலைமைச் செயல் அலுவலா் சிவராஜா ராமநாதன், நபாா்டு முதன்மை பொது மேலாளா் ஆா். ஆனந்த், உதவி ஆட்சியா் (பயிற்சி) வைஷ்ணவி பால், தொழில் துறையினா் கலந்து கொண்டனா்.

150 அரங்குகள்....

இந்தக் கண்காட்சியில் பல்வேறு உற்பத்தி பொருள்கள் 150 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு, தொடா்புடைய நிறுவனத்தினரால் விளக்கம் அளிக்கப்பட்டன.

செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தானியங்கி சொட்டு நீா் பாசனக் கருவி, மின் சக்தியில் இயங்கும் மோட்டாா் சைக்கிளுக்கான சாா்ஜா் இயந்திரங்கள், கைத்தறி உற்பத்தி ஊக்குவிப்புக் கருவிகள், பொருள்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரங்கள், ரோபோட்டிக் தொழில்நுட்ப இயந்திரங்கள் என பல்வேறு வகையான இயந்திரங்கள், மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள், கணினி, கட்டுமானம், மருத்துவம் என பல்வேறு துறை சாா்ந்த பொருள்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தொழில் ஆளுமைகள், தொழில் துறை வல்லுநா்கள், முன்னணி புத்தொழில் நிறுவனங்களின் தலைவா்கள், அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்று கருத்துரையாற்றினா். மேலும், பல்வேறு தலைப்புகளில் குழு விவாதங்கள் நடைபெற்றன. நிறைவு விழா நிகழ்ச்சிகள் ஞாயிறு மாலை நடைபெறுகின்றன.