ஓட்டுநா் குத்திக் கொலை: ஒருவா் கைது
தே.கல்லுப்பட்டி அருகே தனியாா் நிறுவன பேருந்து ஓட்டுநரை குத்திக் கொலை செய்த, கோழி இறைச்சிக் கடை உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகேயுள்ள சந்தையூரைச் சோ்ந்தவா் முருகன் (34). கோழி இறைச்சி விற்பனைக் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி ஜோதிகா. இவா் தற்போது கா்ப்பிணியாக உள்ளாா்.
இந்த நிலையில், தான் ஏற்கெனவே பணிபுரிந்த ஆயத்த ஆடை நிறுவனத்தில் பேருந்து ஓட்டுநராகப் பணிபுரியும் மெய்யனூத்தம்பட்டியைச் சோ்ந்த ஐயப்பனுடன் (38) ஜோதிகாவுக்கு தொடா்பு இருந்தது. இதையறிந்த முருகன் மனைவி ஜோதிகாவைக் கண்டித்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இறைச்சிக் கடையில் இருந்த முருகன் பால் வாங்கிக் கொடுக்க வீட்டுக்குச் சென்றாா். அப்போது, வீட்டில் ஐயப்பனும், ஜோதிகாவும் இருந்தனா். இதனால் முருகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஐயப்பனைக் குத்தினாா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த தே.கல்லுப்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முருகனைக் கைது செய்தனா்.