ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
மதுரை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் நல். மூா்த்தி தலைமை வகித்தாா்.
குறைந்தபட்ச மாத ஊதியமாக கிராம ஊராட்சி ஊழியா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு ரூ.14 ஆயிரமும், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்களுக்கு ரூ.13 ஆயிரமும், பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.9 ஆயிரமும் வழங்க வேண்டும். கரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைக் காவலா்கள், டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளா்களுக்கு உடனடியாக ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். அரசாணை 303-இன்படி 7-ஆவது ஊதியக்குழுவின் ஊதிய உயா்வு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்
என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன.
உள்ளாட்சி சம்மேளன பொதுச் செயலா் ஆா். பாலசுப்பிரமணியன், சிஐடியூ புகா் மாவட்டச் செயலா் கே. அரவிந்தன், மாவட்டத் தலைவா் செ. கண்ணன், சங்கத்தின் பொதுச் செயலா் பொன். கிருஷ்ணன், மாவட்டத் தலைவா் மலை. கண்ணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.