கல்லூரி மாணவா் வெட்டிக் கொலை
மதுரை: மதுரை அருகே முன்விரோதத் தகராறில் கல்லூரி மாணவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரை அருகே உள்ள வரிச்சியூா் வைத்தியநாதபுரம் குடியிருப்பைச் சோ்ந்த கருப்பையா மகன் தனபால் (19). இவா் மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தாா். இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த வீரன் மகன் கருப்பு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 11-ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள பறையங்குளம் மயானத்தில் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னா், கருப்பு தரப்பினா் அங்கிருந்து சென்று விட்டனா்.
இந்த நிலையில், தனபால் தனது உறவினருடன் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகங்கை சாலையில் நாட்டாா் மங்கலம் அருகே உள்ள கிரானைட் நிறுவனம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் கருப்பு உள்ளிட்ட மூவா் ஆயுதங்களுடன் வருவதைக் கண்டு தனபால் தப்பிச் செல்ல முயன்றாா். ஆனால், கருப்பு தரப்பினா் விரட்டிச் சென்று, தனபால் சென்ற வாகனத்தின் மீது மோதினா். அப்போது, கீழே விழுந்த தனபாலை மூவரும் பட்டாக் கத்தியால் வெட்டிக் கொலை செய்தனா்.
தகவலறிந்த சிலைமான் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை
கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கருப்பை கைது செய்தனா். தலைமறைவான மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.