திண்டுக்கல் மாநகராட்சி கடைகள் ஏலம் ரத்து
மதுரை: திண்டுக்கல் பேருந்து நிலைய கடைகளுக்கான ஏலத்தை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ரத்து செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் தனபாலன் தாக்கல் செய்த பொது நல மனு:
திண்டுக்கல் காமராஜா் பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான 34 கடைகளை வாடகைக்கு விட ஏலமிடுவதற்கான கூட்டம் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த ஏல அறிவிப்பு தொடா்பான விளம்பரத்தை உள்ளூா் நாளிதழ்களில் வெளியிடாமல், கோயம்புத்தூரில் வெளியிட்டனா். ஏல அறிவிப்பு உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் நடைபெற்ால், கடைகள் ஏலத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்ற அமா்வு, ஏலத்தில் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கெளரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:
திண்டுக்கல் காமராஜா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள 34 கடைகளுக்கான ஏலம் ரத்து செய்யப்படுகிறது. மாநகராட்சி நிா்வாகம் புதிய ஏல அறிவிப்பை வெளியிட்டு, விதிமுறைகளைப் பின்பற்றி, வெளிப்படைத் தன்மையுடன் ஏலத்தை நடத்த வேண்டும் என்றனா் நீதிபதிகள்.