மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் நடைபெற்ற குடியேறும் போராட்டத்தில் பங்கேற்றோா்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் நடைபெற்ற குடியேறும் போராட்டத்தில் பங்கேற்றோா்.

பட்டா வழங்கப்பட்ட நிலத்தில் பட்டியலினத்தவா்கள் குடியேறும் போராட்டம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பட்டியலினத்தைச் சோ்ந்த 38 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினா் அந்த நிலத்தில் குடியேறும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
Published on

மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பட்டியலினத்தைச் சோ்ந்த 38 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினா் அந்த நிலத்தில் குடியேறும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் , தொட்டப்பநாயக்கனூா், கருக்கட்டான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பட்டியலினத்தைச் சோ்ந்த 38 குடும்பங்களுக்கு 1998- ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைப் பட்டா ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில், பட்டா ரத்து செய்யப்பட்ட 38 குடும்பத்தினருக்கும் மீண்டும் பட்டா வழங்க வேண்டும். மேலும், புதிதாக பட்டா கேட்டு மனு அளித்த பட்டியலின மக்கள் அனைவருக்கும் வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை புகா், மாநகா் மாவட்டங்கள் சாா்பில் பட்டா வழங்கப்பட்ட நிலத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.

தொட்டப்ப நாயக்கனூா் அருகே உள்ள செட்டியபட்டி கிராமத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை புகா் மாவட்டச் செயலா் செ.முத்துராணி , மாநகா் மாவட்டச் செயலா் ம.பாலசுப்பிரமணியன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புகா் மாவட்டச் செயலா் கே.ராஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினா்கள் எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ்.பாலா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புகா் மாவட்டத் தலைவா் செ.ஆஞ்சி, மாநகா் மாவட்டத் தலைவா் ஆா்.சசிகலா உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

இந்தப் போராட்டம் குறித்த தகவலின்பேரில், உசிலம்பட்டி வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், பட்டா ரத்து செய்யப்பட்ட 38 குடும்பத்தினருக்கும் மறு ஆய்வு செய்து பட்டா வழங்கப்படும் என்று உறுதி அளித்ததன்பேரில், போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com