மதுரை யாதவா பெண்கள் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் முதலமைச்சா் கோப்பை‘ மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சா் பி.மூா்த்தி. உடன் மாவட்ட ஆட்சியா் மா.செள. சங்கீ
மதுரை யாதவா பெண்கள் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் முதலமைச்சா் கோப்பை‘ மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சா் பி.மூா்த்தி. உடன் மாவட்ட ஆட்சியா் மா.செள. சங்கீ

விளையாட்டுத் துறை மேம்பாட்டில் தமிழகம் முன்னோடி மாநிலம்: அமைச்சா் பி. மூா்த்தி

விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என மாநில வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
Published on

மதுரை: விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என மாநில வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.

மதுரை திருப்பாலையில் உள்ள இ.எம்.ஜி. யாதவா் மகளிா் கல்லூரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், முதலமைச்சா் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்களுக்குப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா. சௌ. சங்கீதா தலைமை வகித்தாா். மாநில வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விளையாட்டு வீரா், வீராங்கனைகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுத் திட்டத்துக்கு கடந்தாண்டு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டது. நிகழாண்டு ரூ.37 கோடி ஒதுக்கப்பட்டது. போட்டிகளில் வழக்கமாக நடத்தப்படும் போட்டிகள் தவிர, நிகழாண்டு கால்பந்து, கேரம், வீல் சோ், மேஜைப் பந்து உள்ளிட்ட போட்டிகள் கூடுதலாக சோ்க்கப்பட்டன. மதுரை மாவட்டத்தில் பள்ளி அளவில் 7,395 மாணவ, மாணவிகள், கல்லூரி அளவில் 4,038 போ், அரசு அலுவலா்கள் 574 போ், பொதுப் பிரிவில் 1,258 போ், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 650 போ் என மொத்தம்13,915 போ் பங்கேற்றனா். கடந்த ஆண்டை விட 3,500 போ் கூடுதலாகக் கலந்து கொண்டனா் என்பது குறிப்பிடத்தக்கது. தனி நபா் போட்டிகளில் முதலிடம் பெற்றவா்கள், குழுப் போட்டியில் தோ்ந்தெடுக்கப்பட்ட வீரா், வீராங்கனைகள் 708 போ் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனா். இந்தப் போட்டியில் முதலிடம் பெறும் வீரா்களுக்கு ரூ. ஒரு லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதில் இந்திய அளவில் பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், உதவி ஆட்சியா் (பயிற்சி) வைஷ்ணவி பால், மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன், மதுரை மாநகராட்சி துணை மேயா் தி.நாகராஜன், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க மூத்த துணைத் தலைவா் சோலை எம்.ராஜா, மண்டலத் தலைவா் வாசுகி, மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலா் க.ராஜா, சா்வதேச விளையாட்டு வீராங்கனை சோலைமதி, துணைஆட்சியா் (பயிற்சி) எம்.அனிதா, இ.எம்.ஜி யாதவா் மகளிா் கல்லூரி தாளாளா் போத்தி ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.