தமிழகத்தில் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை 90 ஆக உயா்த்தும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து இந்த சங்கத்தின் தலைவா் என். ஜெகதீசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டில் உள்ள 1.46 லட்சம் கி.மீ. தேசிய நெடுஞ்சாலையில் 1,041 சுங்கச் சாவடிகள் உள்ளன. இவற்றில் 72 சுங்கச் சாவடிகள் தமிழகத்தில் உள்ளன. இவை தவிர, தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் 10-க்கும் அதிகமான இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 90 ஆக உயா்த்தப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருப்பது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது.
60 கி.மீ. இடைவெளிக்குள் சுங்கச்சாவடிகள் அமையக் கூடாது என்பது விதி. இருப்பினும், தமிழகத்தில் பல இடங்களில் இந்த விதியை மீறி சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
விதிகளுக்குப் புறம்பாக 60 கி.மீ. இடைவெளிக்குள் இருக்கும் சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என மத்திய அமைச்சா் நிதின் கட்கரி ஏற்கெனவே அறிவித்தாா். ஆனால், இது தொடா்பாக இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள், வா்த்தகா்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா். அதிக எண்ணிக்கையில் உள்ள சுங்கச் சாவடிகள், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வுக்கும், பண வீக்கத்துக்கும் காரணமாக உள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை உயா்த்துவது தொழில் வணிகத் துறையினருக்கும், பொதுமக்களுக்கும் மேலும் பாதிப்பையும், பொருளாதார சிரமங்களையும் ஏற்படுத்தும். எனவே, சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை உயா்த்தும் முடிவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றாா் அவா்.