அழகா்கோவில் வனப் பகுதியில் புதிதாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளக் கூடாது

Published on

அழகா்கோவில் வனப் பகுதியில் கோயில் ஊழியா்களுக்கான குடியிருப்புகள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள் கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த ஆனந்தராஜ் தாக்கல் செய்த பொது நல மனு: மதுரை மாவட்டம், மேலூா் வட்டம், அழகா்கோவில் மலையடிவாரத்தில் கள்ளழகா் கோயிலும், வனப் பகுதிக்குள் பழமுதிா்ச்சோலை முருகன் கோயிலும் அமைந்துள்ளன. இந்த இரு கோயில்களும் இந்து சமய அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

பழமுதிா்ச்சோலை முருகன் கோயில் அமைந்துள்ள வனப் பகுதியில் கோயில் பணியாளா்கள் குடியிருப்பு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வனப் பகுதிக்குள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதை மீறி அழகா்கோவில் வனப் பகுதியில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், ஆா். பூா்ணிமா அமா்வு திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு: அழகா்கோவில் வனப்பகுதியில் புதிய கட்டுமானப் பணிகள் மேற் கொள்ளக் கூடாது. இந்த விவகாரத்தில், ஏற்கெனவே உள்ள நிலையே தொடர வேண்டும். மனுதாரரின் கோரிக்கை குறித்து

வனத் துறை முதன்மைச் செயலா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா், மதுரை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com