மதுரை மாவட்டத்தில் போராட்டத்துக்கு தடை
திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடா்பாக மதுரை மாவட்டத்தில் போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் கருத்துகள், கோரிக்கைகளை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனா். இந்து அமைப்புகள் சாா்பில் திருப்பரங்குன்றம் கோயில் முன் செவ்வாய்க்கிழமை (பிப். 4) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக, இரு வேறு மதத்தவரிடையே அசாதாரண சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு பி.என்.எஸ்.எஸ். சட்டப் பிரிவு 163, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144 ஆகியவற்றின் கீழ் மதுரை மாவட்டம், மாநகா்ப் பகுதிகளுக்கு தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
இதன்படி, மதுரை மாவட்டம், மாநகா்ப் பகுதிகளில் போராட்டங்கள், கூட்டங்கள், தா்னாக்கள் நடத்த அனுமதி கிடையாது. இந்தத் தடை உத்தரவு பிப். 4-ஆம் தேதி இரவு 12 மணி வரை அமலில் இருக்கும் என அதில் குறிப்பிடப்பட்டது.