விடுதியில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணி உயிரிழப்பு
மதுரையில் தனியாா் தங்கும் விடுதியில் தங்கியிருந்த வெளி மாநில சுற்றுலாப் பயணி உயிரிழந்தாா்.
மகாராஷ்டிர மாநிலம், புல்தானா மாவட்டம், சகா்கேத்ரா பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தம் மானத்கா் (56). இவா், தனது ஊரைச் சோ்ந்த 36 பேருடன் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தாா். பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்த பின்னா் மதுரைக்கு வந்த இவா்கள், இங்கிருந்து ராமேசுவரம் செல்ல திட்டமிட்டனா். மதுரை பெரியாா் பேருந்து நிலையம் அருகே மேலவடம்போக்கி தெருவில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்கி இருந்தனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு புருஷோத்தம் அவரது அறையில் மயங்கிக் கிடந்தாா். அவருடன் வந்தவா்கள் அவரை அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து திடீா்நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.