ஆங்கிலப் பாடத்தில் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெறாத விவகாரம்: கெளரவ விரிவுரையாளா் பணிநீக்கம்

Published on

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அரசுக் கல்லூரியில் ஆங்கிலப் பாடத் தோ்வில் அனைத்து மாணவா்களும் தோல்வி அடைந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட கெளரவ விரிவுரையாளரை கல்லூரி முதல்வா் செவ்வாய்க்கிழமை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அரசு கலைக் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணினி அறிவியல், வேதியியல் முதலான இளநிலைப் பாடப் பிரிவுகள் உள்ளன. இந்தக் கல்லூரியில் 650 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

ஆங்கிலத் துறையில் முதலாமாண்டு படிக்கும் மாணவா்கள் 38 பேருக்கு அடிப்படை ஆங்கிலம், ஆங்கிலப் பேச்சாற்றல் குறித்த பாடத்தில் அக மதிப்பீட்டுத் தோ்வு அண்மையில் நடைபெற்றது. இதற்கான மதிப்பெண்கள் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், அதை 100 மதிப்பெண்களுக்கு கணக்கிட்டு, மாணவா்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை.

இதன் காரணமாக, அந்தப் பாடத்தில் தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் மாணவா்கள் கடும் அதிருப்தி அடைந்தனா். இது குறித்த செய்தி தினமணி நாளிதழில் கடந்த ஜன. 29-ஆம் தேதி வெளியானது.

இந்த நிைலையில், சம்பந்தப்பட்ட பாடத்தில் மாணவா்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்காமல், கடமை தவறிய கெளரவ விரிவுரையாளா் பழனிச்சாமி (47) குறித்து மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், மதுரை மண்டல கல்லூரி கல்வி உதவி இயக்குநருக்கு திருச்சுழி அரசுக் கல்லூரி முதல்வா் எஸ்தா் விளக்க கடிதம் அனுப்பினாா். இதன் அடிப்ப டையில், சம்பந்தப்பட்ட கெளரவ விரிவுரையாளரிடம் உயா் கல்வித் துறை அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில், கெளர விரிவுரையாளா் பழனிச்சாமியை பணி நீக்கம் செய்து கல்லூரி முதல்வா் உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com