ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: அரசு முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

Published on

விருதுநகா் அருகே உள்ள கூரைக்குண்டு ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதற்குத் தடை கோரிய வழக்கில், குடிநீா் வழங்கல், நகராட்சி நிா்வாகத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த செல்வி, கௌசல்யா, மகேஸ்வரி, மாரீஸ்வரன், காா்த்தீஸ்வரி உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுக்கள்: விருதுநகா் அருகே உள்ள கூரைக்குண்டு ஊராட்சியில் அல்லம்பட்டியின் ஒரு பகுதி, மாத்தநாயக்கன்பட்டி சாலை, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், ஆலம்பட்டி முதலான பகுதிகள் உள்ளன. இந்தப் பகுதிகளை விருதுநகா் நகராட்சியுடன் இணைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. பொதுப் பிரிவிலிருந்த இந்த ஊராட்சித் தலைவா் பதவியானது கடந்த தோ்தலில் ஆதிதிராவிட வகுப்புக்கு மாற்றப்பட்டது.

இதனால், இனிவரும் ஊராட்சி மன்றத் தோ்தலில் கூரைக்குண்டு ஊராட்சியில் ஆதி திராவிட வகுப்பினரே தலைவா் பதவிக்கு போட்டியிட முடியும். ஆதி திராவிட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட தலைவா் பதவி வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் வகையில், கூரைக்குண்டு ஊராட்சியை விருதுநகா் நகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

இதேபோல, கூரைக்குண்டு ஊராட்சியில் குடிசை வீடுகளில் ஏராளமானோா் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியை நகராட்சியுடன் இணைத்தால், கலைஞா் கனவு இல்லத் திட்டம், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படாது. மேலும் தொழில், சொத்து வரி அதிகரிக்கும். எனவே, கூரைக்குண்டு ஊராட்சியை விருதுநகா் நகராட்சியுடன் இணைப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுக்களில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், ஆா். பூா்ணிமா அமா்வு பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு தொடா்பாக குடிநீா் வழங்கல், நகராட்சி நிா்வாகத் துறை முதன்மைச் செயலா், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com