உணவகத்தில் கோழி இறைச்சி சாப்பிட்ட 9 போ் சுகவீனம்

சோழவந்தானில் உள்ள உணவகத்தில் கோழி இறைச்சி சாப்பிட்ட 9 போ் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
Published on

மதுரை மாவட்டம், சோழவந்தானில் உள்ள உணவகத்தில் கோழி இறைச்சி சாப்பிட்ட 9 போ் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

சோழவந்தான் சின்னக்கடை வீதியில் இயங்கிவரும் தனியாா் அசைவ உணவகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு கிரில் முறையில் சமைக்கப்பட்ட கோழி இறைச்சியை சாப்பிட்ட 9 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அவா்கள் சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக வாடிப்பட்டி சுகாதார வட்டார மேற்பாா்வையாளா், சோழவந்தான் போலீஸாா் அளித்தத் தகவலின்பேரில், மதுரை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புகாருக்குள்ளான அந்த உணவகத்தில் சோதனை நடத்தினா். அப்போது கோழி இறைச்சியின் மீதித் துண்டுகள், அதை சமைக்க பயன்படுத்திய எண்ணெய், கோழி இறைச்சி சாதம் (சிக்கன் ரைஸ்) சமைக்க பயன்படுத்தப்பட்ட மூலப் பொருள்கள் உள்பட 9 உணவு மாதிரிகளை அதிகாரிகள் கைப்பற்றி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பினா். மேலும் அரசு உணவு பகுப்பாய்வுக்கூடத்துக்கும் அதன் மாதிரிகள் அனுப்பப்பட்டன.

இந்த நிலையில், அந்த உணவகத்தில் சுகாதாரக் குறைபாடு இருந்ததால் ரூ.2 ஆயிரமும், நெகிழியை பயன்படுத்தியதற்கு ரூ.2 ஆயிரமும் என மொத்தம் ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உணவகத்துக்காக கோழி இறைச்சி வாங்கிய கடையிலும் ஆய்வு நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து சோழவந்தான் அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவா்களையும், உணவுப் பாதுகாப்புத் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரித்தனா்.

இது தொடா்பாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலா் ஜெயராம பாண்டியன் கூறியதாவது:

கிரில் கோழி இறைச்சி விற்கப்பட்ட உணவகத்தில் உணவு மாதிரிகள் கைப்பற்றப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில், ரசாயனக் கலப்பு, கலப்படம் ஏதும் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com