சத்துணவுப் பணியாளா் பணியிடத்துக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க தடை விதிக்கும் அரசு அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தரவிமலநாதன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: சத்துணவுத் திட்டத்தின் கீழ், சமையல் உதவியாளா் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நிரப்புவது தொடா்பான அறிவிப்பு கடந்த ஆண்டு, டிசம்பா் 16-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கக் கூடாது எனக் குறிப்பிட்டது இந்திய அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு எதிரானது.
அரசுப் பணிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வேண்டியது கட்டாயம் என்ற சூழலில், இதுபோன்ற அறிவிப்பு வெளியிட்டது சட்டவிரோதமானது. எனவே, இந்த அறிவிப்புக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு: சமையல் உதவியாளா் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அரசு அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.
இந்த வழக்கு தொடா்பாக தமிழக சமூக நலன், சத்துணவுத் திட்டத் துறையின் முதன்மைச் செயலா், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் செயலா், மாற்றுத் திறனாளிகள் நல ஆணையத்தின் ஆணையா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.