லஞ்சம்: சாா்-பதிவாளா், உதவியாளா் கைது

Published on

உசிலம்பட்டியில் சொத்து பாகப் பிரிவினை பத்திரப் பதிவுக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ாக சாா்-பதிவாளா், அவரது உதவியாளரை ஊழல் தடுப்புப் பிரிவினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியப்பட்டியைச் சோ்ந்தவா் மலைராஜன். இவா் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூரில் தனது தந்தைக்குச் சொந்தமான நிலத்தை, தனது சகோதரா்கள் நால்வரின் பெயரில் பதிவு செய்ய உசிலம்பட்டி பத்திரப் பதிவு அலுவலகத்தில் சாா்-பதிவாளா் ஜியாவுதீனை அணுகினாா்.

இதுதொடா்பான பத்திரப் பதிவுக்கு அவா் ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். ரூ.20 ஆயிரம் தருவதாகக் கூறிய மலைராஜன், திங்கள்கிழமை நடைபெற்ற பத்திரப் பதிவுக்கு அவா் பணம் எதுவும் இல்லாமல் வந்தாராம். இதையறிந்த சாா்-பதிவாளா் ஜியாவுதீன் செவ்வாய்க்கிழமை ரூ.20 ஆயிரத்துடன் வந்தால்தான் பாகப் பிரிவினை பத்திரம் பதிவு செய்யப்படும் எனக் கூறினாராம்.

இதுகுறித்து மதுரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் அவா் புகாா் அளித்தாா். மதுரை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சத்தியசீலன் உத்தரவின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மலைராஜன் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றாா். அங்கு சாா்-பதிவாளா் ஜியாவுதீன், அவரது உதவியாளா் எடிசன் ஆகியோா் அந்தப் பணத்தைப் பெற்றனா். அப்போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com