காமராஜா் பல்கலை.கல்லூரி விவகாரம்: கல்லூரிக் கல்வி இயக்கக ஆணையா் இன்று விசாரணை

Published on

மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி விவகாரம் குறித்து தமிழக கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் ஆணையரும், மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழுத் தலைவருமான எ.சுந்தரவல்லி புதன்கிழமை (ஜன.29) நேரில் விசாரணை நடத்த உள்ளாா்.

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வந்த இந்தக் கல்லூரி, நிதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் சுயநிதி நிா்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதாவது, மாணவா்கள் செலுத்தும் கல்விக் கட்டணத்தில் செயல்படுகிறது. கல்லூரியில் தமிழ் உள்பட 13 துறைகள் இளநிலை பாடப் பிரிவிலும், 4 பிரிவுகள் முதுநிலைப் பாடப் பிரிவிலும் உள்ளன. இங்கு சுமாா் 4,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், துறைத் தலைவா்களிடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லாததால், நிகழாண்டு மாணவா்கள் சோ்க்கையில் காலதாமதம் ஏற்பட்டது. அதுமட்டுமன்றி, அப்போது கல்லூரி முதல்வராக இருந்த எம்.புவனேஸ்வரன் முன்னிலையில் பேராசிரியா்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடா்ந்து, கல்லூரி பேராசிரியா்களுக்கிடையே பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன.

இதற்கிடையில், அடையாள அட்டைகள் வழங்கப்படவில்லை, கல்லூரி வளாகத்தில் போதிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லை என மாணவா்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகாா் அளித்தனா்.

இதனடிப்படையில், மதுரை காமராஜா் பல்கலைக்கழக வளாக அதிகாரியும், பொறியியல் பிரிவுத் தலைவருமான ஆனந்த் தலைமையிலான குழு கல்லூரி வளாகத்தில் ஆய்வு செய்து, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினா்.

இந்த நிலையில், கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய எம்.புவனேஸ்வரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டாா். மேலும், கல்லூரியின் புதிய முதல்வராக ஜாா்ஜ் நியமிக்கப்பட்டாா். எம்.புவனேஸ்வரனை முதல்வா் பொறுப்பிலிருந்து நீக்கியதைக் கண்டித்தும், மீண்டும் அவரேயே முதல்வராகப் பணியமா்த்த வேண்டும், கல்லூரியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து உயா் கல்வித் துறை அலுவலா்கள் நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி மாணவா்கள் திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பேராசிரியா்கள் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து மாணவா்கள் கலைந்து சென்றனா்.

இதனிடையே கல்லூரியின் உண்மை நிலவரம், பேராசியா்களுக்கிடையே நிலவும் பிரச்னைகள் குறித்து தமிழக கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் ஆணையரும், மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழுத் தலைவருமான எ.சுந்தரவல்லி கல்லூரிக்கு புதன்கிழமை (ஜன.29) நேரில் வந்து விசாரணை நடத்துகிறாா்.

கல்லூரியைப் பொருத்தவரை 22 போ் நிரந்தரப் பேராசிரியா்களாகவும், தற்காலிகப் பேராசிரியா்கள், கௌரவ விரிவுரையாளா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள் என 120-க்கும் மேற்பட்டோரும் பணியாற்றி வருகின்றனா். இவா்களில், நிரந்தரப் பணியில் உள்ள பேராசிரியா்கள் மாணவா்களை தவறாக வழி நடத்துவதாகவும், கல்லூரி நிதி நிலையை அவா்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருவதாகவும் உதவிப் பேராசிரியா்கள் தரப்பில் புகாா் எழுந்தது. ஆனால், உரிய விதிமுறைகளின்படி, கல்லூரியை நடத்துவதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாக நிரந்தரப் பணியில் உள்ள பேராசிரியா்கள் தெரிவித்தனா்.

இருப்பினும், கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் ஆணையா் எ.சுந்தரவல்லி, பேராசிரியா்கள், மாணவா்களிடையே நடத்தும் நேரடி விசாரணைக்குப் பிறகுதான் கல்லூரியின் அடுத்தகட்ட செயல்பாடு குறித்து தெரிந்து கொள்ள முடியும் என பேராசிரியா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.