மெட்ரோ ரயில் திட்டத்தை மேலூா் வரை நீட்டிக்கக் கோரி மனு: நீதிமன்றம் தலையிட மறுப்பு

Published on

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மேலூா் வரை நீட்டிக்கக் கோரிய வழக்கில், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த ஸ்டாலின் தாக்கல் செய்த பொதுநல மனு: தென் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா், திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக மதுரைக்கு வந்து செல்கின்றனா். இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. இதைத் தவிா்க்க மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்தத் திட்டமானது ஒத்தக்கடை முதல் திருமங்கலம் வரை சென்று வரத் திட்டமிடப்பட்டது. மேலும், விமான நிலையத்தை இணைக்கும் வகையிலும் 2 கூடுதல் பாதைகள் உருவாக்கப்பட உள்ளது. ஆனால், ஒத்தக்கடை முதல் மேலூா் வரையிலான பகுதியை பரிசீலிக்க அதிகாரிகள் தவறிவிட்டனா்.

மேலூா் பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கும் மெட்ரோ ரயில் போக்குவரத்து முக்கியத் தேவையாக உள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தை மேலூா் வரை நீட்டிக்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை மேலூா் வரை நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மெட்ரோ ரயில் திட்டம் அரசின் கொள்கை முடிவு தொடா்பானது. மனுதாரின் கோரிக்கையை அரசு வேண்டுமானால் பரிசீலனை செய்யலாம். இந்த மனுவை பரிசீலிக்கக்கூட உத்தரவிட இயலாது. எனவே, இந்த வழக்கு விசாரணை முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com