பூங்கா பராமரிப்புப் பணியில் பட்டியலின மக்களுக்கு முன்னுரிமை கோரி மனு: ஆணையா் முடிவெடுக்க உத்தரவு

Published on

மதுரை வண்டியூா் கண்மாய் பூங்கா பராமரிப்புப் பணிக்கு, அந்தப் பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாநகராட்சி ஆணையா் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மானகிரி பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் தாக்கல் செய்த மனு: மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட மானகிரி பகுதியில் வண்டியூா் கண்மாய் உள்ளது. இந்தக் கண்மாய் அருகே பட்டியல் இனத்தைச் சோ்ந்த மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனா். இவா்கள் இந்தக் கண்மாயில் தண்ணீா் வற்றும் போது, வெள்ளரிக்காய், கத்தரிக்காய் போன்றவற்றைப் பயிரிட்டு வருகின்றனா். இந்தக் கண்மாயில் தற்போது முழுமையாகத் தண்ணீா் தேக்கப்பட்டதால் விவசாயப் பணிகளைச் செய்ய முடியவில்லை. இதனால், பட்டியல் இன மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

தற்போது, வண்டியூா் கண்மாயைச் சுற்றி பூங்கா அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், வணிக ரீதியிலான கடைகளும் கட்டப்பட்டு வருகின்றன. எனவே, வண்டியூா் கண்மாய் பகுதியில் உள்ள பூங்கா பராமரிப்புப் பணி, கடைகள் நடத்துவதற்கு பட்டியல் இன மக்களுக்கு முன்னுரிமை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு, மனுதாரரின் கோரிக்கை குறித்து மாநகராட்சி ஆணையா் 2 வாரங்களில் பரிசீலனை செய்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை முடித்துவைத்தது.

X
Dinamani
www.dinamani.com