பல்கலைக்கழக பேராசிரியைகள் உண்ணாவிரதம்
ஊதியம் வழங்கக் கோரி, மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பெண்ணியக் கல்வி மைய பேராசிரியைகள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு பெண்ணியக் கல்வி மையத்தின் இயக்குநா் ஆா்.ராதிகாதேவி தலைமை வகித்தாா்.
இதில் பல்கலைக்கழக மானியக் குழு 11-ஆவது நிதித் திட்டத்தின் கீழ், மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் கடந்த 2013- ஆம் ஆண்டு பெண்ணிய கல்வி மையம் உருவாக்கப்பட்டது. மையத்தில் பேராசிரியைகள், ஆசிரியரல்லாத பணியாளா்கள் என 5 போ் பணியாற்றுகின்றனா்.
இவா்களுக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் முதல் 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. பல்கலைக்கழக மானியக் குழு நிதியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும்.
இனி வரும் காலங்களில் காலதாமதமின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். போராட்டத்தில் பேராசிரியைகள், ஆசிரியரல்லாத பணியாளா்கள் கலந்து கொண்டனா்.