விவசாயி தற்கொலை: உடலைப் பெற மறுத்து உறவினா்கள் போராட்டம்

Published on

உசிலம்பட்டி அருகே ரூ.4 லட்சம் கடனுக்கு கந்து வட்டியாக ரூ.17 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்ததால் விவசாயி தற்கொலை செய்துகொண்டாா். இதையடுத்து, அவரது உடலைப் பெற மறுத்து உறவினா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ள ரெட்டியபட்டியைச் சோ்ந்தவா் பரமன் (55). இவா் தனது தோட்டத்தில் பூக்கள் விவசாயம் செய்து வந்தாா். இவரது மனைவி மின்னல் கொடி. இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இந்த நிலையில், பரமன் மகன் தெய்வேந்திரன், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை மலா்ச் சந்தையில் கடை நடத்தி வரும் பாண்டியராஜன், பாலமுருகன் ஆகியோரிடம் ரூ. 4 லட்சம் கடனாக வாங்கினாா். இதற்கு 10 சதவீத வட்டியும் வசூலித்ததாக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடன் ரூ.4 லட்சத்துக்கு வட்டி சோ்த்து ரூ.17 லட்சம் ஆனதாகவும், அதற்கு ஈடாக பரமனின் நிலத்தை தங்கள் பெயருக்கு பதிவு செய்து தர வேண்டும் என்று பாண்டியராஜன் தரப்பினா் கேட்டுள்ளனா். இதற்கு பரமன் மறுப்புத் தெரிவித்ததாா். இதனால், பாண்டியராஜன், பாலமுருகன் உல்ளிட்டோா் பரமன் வீட்டுக்குச் சென்று பரமன், அவரது மனைவி, குடும்பத்தினரை அவதூறாகப் பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டினராம். இதனால் மனமுடைந்த பரமன் வீட்டில் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற விக்கிரமங்கலம் போலீஸாா், உடலை மீட்டு கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இந்நிலையில் பரமனின் தற்கொலைக்கு காரணமாக கந்து வட்டிக்காரா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பரமனின் குடும்பத்தினா், உறவினா்கள் அவரது உடலை வாங்க மறுத்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா். பின்னா், அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com