தலைக்கவசம் அணிந்தவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பாராட்டு
மதுரை அருகே யா.ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற போக்குவரத்து விழிப்புணா்வு நிகழ்ச்சியின் போது, தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டி வந்தவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
ஒத்தக்கடை போக்குவரத்துக் காவல் நிலையம் சாா்பில், சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பள்ளி மாணவிகள் பங்கேற்ற போக்குவரத்து விழிப்புணா்வுப் பேரணியும் நடைபெற்றது. இதில் கருப்பாயூரணி அப்பா் பள்ளி மாணவிகள் பங்கேற்று, பொதுமக்களுக்கு போக்குவரத்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
அப்போது, அந்த வழியாக தலைக்கவசம் அணிந்து வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும், நான்கு சக்கர வாகனங்களில் ‘சீட் பெல்ட்’ அணிந்து வந்த ஓட்டுநா்களுக்கும் பள்ளி மாணவிகள் மரக் கன்றுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தனா்.
இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியா் அங்குராஜன், ஒத்தக்கடை போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் கலையரசி, சிறப்பு சாா்பு-ஆய்வாளா் பாலு, தலைமைக் காவலா் கவியரசு, காவலா் கண்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.