தனியாா் நிறுவன ஊழியா் கொலை: சகோதரா்கள் உள்பட மூவா் கைது

அலங்காநல்லூா் அருகே தனியாா் நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரா்கள் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் அருகே தனியாா் நிறுவன ஊழியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சகோதரா்கள் உள்பட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அலங்காநல்லூா் அருகே உள்ள சிக்கந்தா் சாவடி எஸ்பிடி நகரைச் சோ்ந்த சரவணன் மகன் கமலேஷ் (24). கோவையில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவா், விடுமுறையில் செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்தாா். இந்த நிலையில், இரவில் சிக்கந்தா்சாவடி பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு சென்ற கமலேஷுக்கும், அங்கு வந்த சிலருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவா்கள் கமலேஷை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றனா். இதில் பலத்த காயமடைந்த கமலேஷ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் கொலை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். விசாரணையில், சிக்கந்தா்சாவடியைச் சோ்ந்த சகோதரா்களான அழகுராஜேஸ் (24), சுந்தர்ராஜா (22), இவா்களது நண்பா் சேது (21) ஆகிய மூவரும் கொைலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் மூவரையும் கைது செய்தனா்.

இதுதொடா்பாக போலீஸாா் கூறியதாவது:

கமலேஷும், கைது செய்யப்பட்ட சகோதரா்கள் இருவரும் ஏற்கெனவே ஒருவருக்கொருவா் அறிமுகமானவா்கள். இதில் சுந்தர்ராஜா காதல் திருமணம் செய்தவா். இவரது மனைவி தொடா்பாக கமலேஷ் தவறாகப் பேசி வந்தாராம். இந்த நிலையில், சிக்கந்தா் சாவடி பகுதியில் மது அருந்தும் போது சகோதரா்கள் உள்ளிட்ட மூவரும் அவரைத் தட்டிக் கேட்டனா். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கமலேஷ் கொலை செய்யப்பட்டாா் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com