குற்றால அருவியில் அடிப்படை வசதிகள்: வழக்குரைஞா் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
குற்றால அருவியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிய வழக்கில் வழக்குரைஞா் ஆணையம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த கிருஷ்ணசாமி உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் கடந்த 2014- ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனு:
குற்றால அருவியில் குளிக்க வரும் பொதுமக்கள் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனா். இதனால் நீா் மாசுபடுவது மட்டுமன்றி சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது. மேலும், பெண்களுக்கு பாதுகாப்பான கழிப்பறை வசதி இல்லை என்பதுடன், கூடுதலாக வாகன கட்டணமும் வசூல் செய்யப்படுகிறது. எனவே, குற்றால அருவியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, இந்த வழக்கு குறித்து ஆய்வு மேற்கொள்ள தென்காசியைச் சோ்ந்த வழக்குரைஞா் டி.எஸ்.ஆா். வேங்கடரமணா தலைமையிலான வழக்குரைஞா் ஆணையம் நியமிக்கப்பட்டது. இந்த ஆணையம் ஆய்வு செய்து சமா்ப்பித்த அறிக்கையின் படி
கண்காணிப்பு கேமரா பொருத்தவும், சோப்பு, ஷாம்பு, எண்ணெய்க்கு தடை விதிக்கவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே, இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்குரைஞா் ஆணையராக நியமிக்கப்பட்ட வழக்குரைஞா் டி.எஸ்.ஆா். வேங்கடரமணா முன்னிலையாகி கூறியதாவது: குற்றால அருவியில் தற்போது அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அங்கு கோயில் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு விட்டன என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: குற்றாலம் அருவி, கோயிலில் என்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், என்ன வசதிகள் தேவை என்பது குறித்து வழக்குரைஞா் ஆணையம் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
