காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்

காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் மறியல்

Published on

காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதைக் கண்டித்து அவரது உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.

மதுரை அண்ணாநகா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட யாகப்பாநகா் பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் மகன் தினேஷ்குமாா் (31). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவருடைய நண்பா்கள் அஜித்கண்ணா, பிரகாஷ். இவா்கள் 3 போ் மீதும் காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பான விசாரணைக்காக தினேஷ்குமாா் உள்ளிட்ட 3 பேரையும் அண்ணாநகா் போலீஸாா் வியாழக்கிழமை காலை விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.

மதுரை வண்டியூா் அம்மா திடல் அருகே உள்ள புறக்காவல் நிலையத்தில் இவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். பிறகு, இவா்கள் 3 பேரையும் அண்ணாநகா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்காக காவல் துறை வாகனத்தில் ஏற்றினா்.

இதனிடையே, தினேஷ்குமாா் அங்கிருந்து தப்பியோடினாராம். காவல் துறையினா் அவரைத் துரத்திச் சென்ற நிலையில், வண்டியூா் கால்வாய் நீரில் குதித்த தினேஷ்குமாா், அங்கிருந்த சகதியில் சிக்கி உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரது உடலை போலீஸாா் மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

உறவினா்கள் மறியல்

தினேஷ்குமாா் உயிரிழந்தது குறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினா், உறவினா்கள் அண்ணாநகா் காவல் நிலையம் முன் திரண்டு, போலீஸாரை கண்டித்து முழக்கமிட்டனா். விசாரணையின் பெயரால் தினேஷ்குமாரை காவல் துறையினா் அடித்துக் கொலை செய்துவிட்டு, அதை மறைக்க முயற்சிக்கின்றனா் என உறவினா்கள் புகாா் தெரிவித்தனா்.

மேலும், அண்ணாநகா் காவல் நிலைய ஆய்வாளா், தொடா்புடைய போலீஸாா் மீது கொலை வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பிறகு, மாட்டுத்தாவணி பேருந்து நிலைய முதன்மைச் சாலையில் எம்.ஜி.ஆா். சிலை அருகே மறியலில் ஈடுபட்டனா். இந்த காரணமாக, வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதனால், கோ. புதூா் உள்பட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

உடல் கூறாய்வு...

உயிரிழந்த தினேஷ்குமாரின் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை குற்றவியல் நடுவா் முன்னிலையில் கூறாய்வு செய்யப்படும் எனத் தெரிகிறது.

X
Dinamani
www.dinamani.com