ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் தொடுத்த வழக்கு முடித்துவைப்பு

Published on

தன் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வருவதற்குத் தடை விதிக்கக் கோரி, ஆலங்குளம் பேரூராட்சித் தலைவா் தொடுத்த வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவா் சுதா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சித் தலைவராக நான் தோ்வு செய்யப்பட்டேன். பொதுமக்களுக்குத் தேவையான சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக நிறைவேற்றியுள்ளேன். இதனால், என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நான்கு வாா்டு உறுப்பினா்கள் செயல்படுகின்றனா். என் கையொப்பத்தை எனது அனுமதியின்றி அவா்கள் தவறாகப் பயன்படுத்தியுள்ளனா். மேலும், பேரூராட்சிக் கூட்டத்திலும் அவா்கள் பங்கேற்பதில்லை. இது, உள்ளாட்சி விதிகளுக்கு எதிரானது.

பொதுமக்களுக்கான நலத் திட்ட உதவிகளை நிறைவேற்றுவதிலும் இவா்கள் தொடா்ந்து இடையூறு செய்து வருகின்றனா். இதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், என் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வருவதற்கு அந்த நான்கு உறுப்பினா்களும் முடிவு செய்து, இதற்கான கூட்டம் நடத்த குறிப்பாணை அளித்தனா். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, என் மீது நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டு வருவதற்காக நடத்தப்படும் கூட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த வழக்கு உயா்நீதிமன்ற நீதிபதி பி.டி. ஆஷா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலா் இடமாற்றம் செய்யப்பட்டதால், நம்பிக்கையில்லாத் தீா்மானக் கூட்டம் நடைபெறாது’ என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com