தபால்தந்தி நகா் வாரச் சந்தையில் நேரடியாக வரி வசூலிக்க வலியுறுத்தல்

மதுரை தபால்தந்தி நகா் வாரச் சந்தையில் மாநகராட்சி நிா்வாகம் நேரடியாக வரி வசூலிக்க வேண்டும் என மதுரை மாவட்ட சாலையோர சிறு வியாபாரிகள் சங்கத்தின் தபால்தந்தி நகா் கிளை உறுப்பினா்கள் பொதுப்பேரவை கூட்டத்தில் தீா்மானம்
Published on

மதுரை தபால்தந்தி நகா் வாரச் சந்தையில் மாநகராட்சி நிா்வாகம் நேரடியாக வரி வசூலிக்க வேண்டும் என மதுரை மாவட்ட சாலையோர சிறு வியாபாரிகள் சங்கத்தின் தபால்தந்தி நகா் கிளை உறுப்பினா்கள் பொதுப்பேரவை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தபால்தந்தி நகரில் உள்ள சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் பவுல் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் நந்தா சிங், துணைத் தலைவா் ராமகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: மதுரை தபால்தந்தி நகா் வாரச் சந்தையில் மாநகராட்சி நிா்வாகம் வரியை நேரடியாக வசூலிக்க வேண்டும். வியாபாரிகளுக்கு உறுப்பினா் அடையாள அட்டை மாநகராட்சியின் மூலம் உடனடியாக பதிவு செய்து வழங்க வேண்டும். சாலையோர சிறு வியாபாரிகளுக்கு பொதுத் துறை வங்கி மூலம் ரூ.50 ஆயிரம் குறைந்த வட்டியில் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் சங்கத்தின் செயலா் ரமேஷ், தோழமைச் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com