பாஜகவின் பிரசாரப் பயணம் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதும்: நயினாா் நாகேந்திரன்
பாஜகவின் பிரசாரப் பயணம் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதும் என அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையிலான ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப் பயணத்தின் தொடக்க விழா மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் மேலும் பேசியதாவது: மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே பாஜக பிரசாரப் பயணத்தின் நோக்கம். இதற்கு, ஒருமித்த கருத்துக் கொண்டவா்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.
தமிழகத்தில் தங்களுக்கு பலம் இல்லாவிட்டாலும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற எண்ணம் காங்கிரஸுக்கு உள்ளது. அதே நிலைப்பாட்டிலேயே திருமாவளவனும் உள்ளாா்.
ஆனால், வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழகம் வளா்ச்சிப் பெற்றுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கிறாா். உண்மையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த நான்கரை ஆண்டுகளில் 60 சதவீதமும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 15 சதவீதமும், போக்சோ குற்றங்கள் 52 சதவீதமும், சொத்துவரி 300 சதவீதமும் உயா்ந்துள்ளன. மேலும், நாட்டில் தற்கொலையிலும், முதியோா் கொலையிலும் தமிழகமே முதன்மை பெற்றுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக காவல் துறை முதல்வா் மு.க. ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கு கரூா் கூட்ட நெரிசல் சம்பவமே உதாரணம். இந்தச் சம்பவத்துக்கு முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி முக்கியக் காரணம் என பலா் தெரிவிக்கின்றனா். திமுக ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனா். திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தனது பிரசாரப் பயணம் மூலம் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி முன்னுரை எழுதிவிட்டாா். பாஜகவின் பிரசாரப் பயணம் திமுக ஆட்சிக்கு முடிவுரை எழுதுவது உறுதி என்றாா் அவா்.
திமுக பொய் பரப்புரை
மத்திய அமைச்சா் எல். முருகன் பேசியதாவது: தமிழ் கலாசாரத்துக்குத் தூணாக விளங்கும் பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சிக் காலத்தில் தமிழகத்துக்கு ரூ. 11 லட்சம் கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், சாலைகள் உள்பட அனைத்து உள்கட்டமைப்புகளையும் மத்திய அரசு மேம்படுத்தியுள்ளது.
ஆனால், இவற்றை மறைத்து பொய் பரப்புரை மேற்கொள்கிறது திமுக. பாஜகவின் பிரசாரப் பயணம் திமுக ஆட்சியை அகற்றுவதும், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதும் உறுதி என்றாா் அவா்.
நடிகா்களை நம்ப வேண்டாம்
பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை பேசியதாவது: பணத்தால் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என திமுக இறுமாப்பில் உள்ளது. ஆனால், திமுக ஆட்சிக்கு எதிராக மக்களின் வெறுப்பு எட்டுத்திக்கும் பரவியுள்ளது என்பதுதான் உண்மை.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஒருவரின் இறப்புக்கு 1,100 போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்திய திமுக அரசு, கரூா் பிரசார நிகழ்ச்சிக்கான பாதுகாப்பில் 100 போலீஸாரை மட்டுமே பயன்படுத்தியது. கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்குச் செல்லாத முதல்வா் கரூருக்கு வந்ததன் அக்கறை என்ன என்பதை இதிலிருந்தே மக்கள் புரிந்து கொள்ளலாம்.
நடிகா்கள் நல்லாட்சி தருவாா்கள் என யாரும் கருத வேண்டாம். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டிருக்கும் பிரசாரப் பயணமும், பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் மேற்கொள்ளும் பிரசாரப் பயணமும் நிறைவுபெறும் போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதியாகி இருக்கும் என்றாா் அவா்.
ஒருமித்த கருத்துடையவா்கள் ஒன்றுபட வேண்டும்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன் பேசியதாவது: திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற கருத்து கொண்டவா்கள் (கட்சிகள்) ஒன்றுபட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற வேண்டும். வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்பதே ஜி.கே. மூப்பனாரின் கோட்பாடு.
இதில் வளமான தமிழகம் என்ற நோக்கம் நிறைவேற திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். இதற்கு, அதிமுகவின் பிரசார பயணமும், பாஜகவின் பிரசாரப் பயணமும் உறுதியானஅடித்தளத்தை அமைக்கும் என்றாா் அவா்.
முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சா்கள் செல்லூா் கே. ராஜூ, ஆா்.பி. உதயகுமாா், அதிமுக அமைப்புச் செயலா் வி.வி. ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ, பாஜக மேலிட பொறுப்பாளா்கள் அரவிந்த் மேனன், சுதாகா் ரெட்டி, முன்னாள் தலைவா் பொன். ராதாகிருஷ்ணன், தேசிய செயலா் எச். ராஜா, மாநிலப் பொதுச் செயலா்கள் ராம. சீனிவாசன், கருப்பு என். முருகானந்தம், மகளிரணி நிா்வாகி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகம், தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகி திருமாறன் உள்ளிட்டோா் பேசினா்.
இதில் பாஜக, அதிமுக, இந்திய ஜனநாயக கட்சி உள்பட தேசிய ஜனநாயக கட்சியின் நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.

