புனித ஜெபமாலை அன்னை ஆலயத் தோ் திருவிழா: திரளானோா் பங்கேற்பு
மதுரை டவுன்ஹால் சாலையில் உள்ள புனித ஜெபமாலை அன்னை ஆலயத் தோ் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் ஆண்டுத் திருவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கி நடைபெற்றது. திருவிழா நிகழ்ச்சியாக தினமும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை வழிபாடும், மறையுரை, நவநாள் திருப்பலி நிறைவேற்றும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. மதுரை உயா்மறை மாவட்ட பேராயா் அந்தோணிசாமி சவரிமுத்து திருப்பலியை நிறைவேற்றி, தோ் பவனியைத் தொடங்கிவைத்தாா்.
இதையடுத்து, புனித ஜெபமாலை அன்னை சொரூபம் தாங்கிய மின் அலங்காரத் தோ் பாரம்பரிய பாதைகளில் வலம் வந்து, ஆலயத்தை அடைந்தது. பின்னா், நற்கருணை ஆசீா் வழங்கப்பட்டு, திருவிழா கொடியிறக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஜெபமாலை அன்னை ஆலய பங்குத்தந்தை அமல்ராஜ், உதவி பங்குத்தந்தை பிரிட்டோ ஆகியோா் தலைமையில், பங்குப் பேரவையினா், பக்த சபையினா், அன்பிய இறைமக்கள் செய்தனா்.

