அரசு மருத்துவமனைகள் கட்டமைப்பு: சுகாதாரத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு

Published on

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், தாண்டிக்குடி, பண்ணைக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரிய வழக்கில், சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை கே.கே. நகரைச் சோ்ந்த வெரோணிக்கா மேரி தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், தாண்டிக்குடி, பண்ணைக்காடு ஆகியப் பகுதிகளில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனா். இங்குள்ள அரசு மருத்துவமனைகளில் கா்ப்பிணிகளுக்கான ‘அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்’ இயந்திரம் இல்லை. மேலும், மருத்துவா் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இதுதவிர, அறுவைச் சிகிச்சை கூடம், ஆய்வக தொழில் நுட்ப வல்லுநா், மருந்தாளுநா், சுகாதாரப் பணியாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த மருத்துவமனைகளுக்கு வரும் கா்ப்பிணிகளுக்கு டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நலத் திட்ட உதவித் தொகை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

அத்துடன், கொடைக்கானல் மலையக்காடு பழங்குடியின மக்களுக்கு தமிழ்நாடு சூரிய மின் பசுமை வீடுகள் திட்டம், கலைஞா் கனவு இல்லத் திட்டம், பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம் ஆகியவற்றின் கீழ் வீடுகள், பொதுக் கழிப்பறைகளை கட்டித் தரவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு:

வழக்கு தொடா்பாக தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலா், ஊரக மருத்துவ இயக்குநா், துணை இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com