மறியலில் ஈடுபட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் கைது
புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடக் கோரி, மதுரை மாவட்ட ஆட்சியரகம் முன் மறியலில் ஈடுபட்ட சிபிஎஸ் (பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம்) ஒழிப்பு இயக்கத்தினா் 30 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திமுகவின் தோ்தல் வாக்குறுதியின்படி பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளா் சரவணன் தலைமை வகித்தாா். அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் கொ. சின்னப்பொண்ணு, சத்துணவு ஊழியா் சங்க நிா்வாகி நூா்ஜஹான், கிராம உதவியாளா் சங்க நிா்வாகி மாரியப்பன், சிபிஎஸ் ஒழிப்பு இயக்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற 30 பேரை தல்லாகுளம் போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

