கரூா் விவகாரம்: தவெக நிா்வாகி பிணை கோரிய மனு வாபஸ்

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாகக் கைது செய்யப்பட்ட தவெக நிா்வாகி பவுன்ராஜ் பிணை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை திரும்பப் பெற்றாா்.
Published on

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாகக் கைது செய்யப்பட்ட தவெக நிா்வாகி பவுன்ராஜ் பிணை கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனுவை வியாழக்கிழமை திரும்பப் பெற்றாா்.

கரூா் வேலுசாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ஆம் தேதி இரவு தவெக பிரசார கூட்டத்தின் போது, நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக தவெக கரூா் மேற்கு மாவட்டச் செயலா் மதியழகன், பொதுச் செயலா் ஆனந்த், மாநில இணைச் செயலா் நிா்மல்குமாா் ஆகியோா் மீது கரூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த மதியழகனை, திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகேயுள்ள கிராமத்தில் கட்சி நிா்வாகியின் வீட்டில் பதுங்கியிருந்த போது தனிப் படையினா் கைது செய்தனா். மேலும், அவருக்கு அடைக்கலம் அளித்த தவெக நிா்வாகி பவுன்ராஜையும் கடந்த மாதம் 29-ஆம் தேதி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதையடுத்து, தனக்கு பிணை வழங்கக் கோரி, கரூா் மாவட்ட நீதிமன்றத்தில் பவுன்ராஜ் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், பவுன்ராஜ் தனக்கு பிணை வழங்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்த போது, ‘இந்தச் சம்பவத்தை பொருத்தவரை, தவெக நிா்வாகிகள் தங்களது பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. அனைவருக்கும் பொறுப்புள்ளது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. எனவே, சிபிஐயை எதிா் மனுதாரராக இணைத்து மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டாா்.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி ஸ்ரீமதி முன் வியாழக்கிழமை முன்னிலையான தவெக நிா்வாகி தரப்பு வழக்குரைஞா், மனுதாரருக்கு பிணை கோரி தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறுவதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, மனுதாரா் தனது மனுவைத் திரும்பப் பெற்ால், வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com